Friday, 7 December 2012

திருவருகைக் காலம் 2ம் வாரம்


திருவருகைக் காலம் 2ம் வாரம்
திருப்பலி முன்னுரை

மாற்றம். 'மாற்றம் ஒன்று மட்டுமே இந்த உலகில் மாறாமல் இருக்கிறது.' என்கிறார் கிரேக்கத் தத்துவ ஞானி ஹெராக்கிலிட்டஸ். கிறிஸ்துவின் பிறப்பிற்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் நம்மை இன்றைய திருவழிபாட்டு நிகழ்வுகளும், வாசகங்களும் நம்மை மனமாற்றத்திற்காக அழைக்கின்றது. 

மாற்றம் நமது மனதளவில் மட்டும் ஏற்படாமல், நாம் செய்யும் அனுதின செயல்களிலும் இந்த மாற்றத்தைக் காண இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மாற்றம் ஒன்று மட்டுமே நிலையான ஒன்று என்றறிந்த நாம், என்றுமே மாறாத ஒருவராக இருப்பவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே என்று பறைசாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்த மாறாத தெய்வம் நம்மை நோக்கி வர இருக்கின்றார். அவரது வருகைக்காக நாம் நம்மையே தயாரிப்போம். 
திருமுழுக்கு யோவானின் அறைகூவலைப் பின்பற்றி தன்னலம், பேராசை, தற்பெருமை என்னும் உடல் மாற்றத்திற்கும், உள மாற்றத்திற்கும் தடையாக இருக்கும் செயல்களை எண்ணி மனம் வருந்துவோம், ஆண்டவரின் வருகைக்காக நம்மையே நாம் தயாரிப்போம்.

முதல் வாசக முன்னுரை

தன் வாழ்நாள் எல்லாம் துன்பத்தில் வீழ்ந்து கிடந்த இஸ்ரயேல் மக்களை நோக்கி இறைவாக்கினர் பாரூக் என்றென்றும் மகிழ்ந்திருக்க அழைப்பு விடுக்கின்றார். துன்பத்தில் உள்ள மக்களுக்கு ஆறுதலாக விளங்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனிப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

தூய பவுலடியாரின் நற்செய்திப் பணியில் மிகவும் முக்கியமானவர்கள் பிலிப்பி நகர மக்கள். அவர்களுக்காக, அவர்களின் நலனுக்காக இறைமகன் கிறிஸ்துவிடம் மன்றாடும் பவுலடியாரின் மன்றாட்டைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

01. அன்புத் தந்தையே இறைவா!

     எங்களை வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போல தாங்கள் போதிப்பதையே வாழ்வில் கடைபிடிக்கவும் தங்கள் முன்மாதிரியான வாழ்க்கையின் மூலம் உமது வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்தவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை வேண்டுகிறோம். 

02. அமைதியின் தெய்வமே!

     எங்களை வழிநடத்தும் நாட்டுத் தலைவர்கள் ஏழை மக்களின் துன்பங்களையும் கவலைகளையும், இயலாமையையும் நினைத்து அவர்களுக்கு நன்மை புரிந்திடவும், நல்வழியில் நடத்திடவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை வேண்டுகிறோம்.

03. அன்பு ஆண்டவரே!

     திருவருகைக் காலம் என்பது மனமாற்றத்தின் காலம். மெசியாவை தங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பெறுவதற்கு ஏற்ற காலம் என்பதை உணர்ந்து,  காலத்தை நன்கு பயன்படுத்தி உமது வருகைக்காக தங்களையே தயாரிக்கத் தேவையான வரம் வேண்டி இறைவா உம்மை வேண்டுகிறோம்.

04. ஆறுதலான தெய்வமே!

            தனிமையினாலும், வாழ்வின் போராட்டங்களினாலும் அவதியுறும் மக்களுக்கு உமது வார்த்தையை கொண்டு நாங்கள் ஆறுதல் அளிக்க அருள் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment